இந்திய வம்சாவளி ரவி சவுத்ரி அமெரிக்க விமானப்படையின் உதவி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க விமானப்படையின் முதல் இந்திய அமெரிக்க உதவிச் செயலாளராக ரவி சவுத்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். யுனைடெட் ஸ்டேட்ஸ் செனட்டில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அமெரிக்கப் போக்குவரத்துத் துறையின் மூத்த நிர்வாகியும், முன்னாள் விமானப்படை அதிகாரியுமான ரவி சவுத்ரி, 65-29 வாக்குகளை பெற்று அமெரிக்க விமானப்படையின் உதவிச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமெரிக்காவின் பென்டகனில் உள்ள உயர்மட்ட சிவிலியன் பதவிகளில் ஒன்றான உதவிச் செயலாளர் பதவியில் பணியாற்றும் முதல் இந்திய-அமெரிக்கர் இவர்தான்.
ரவி சவுத்ரி யார்?
ரவிசவுத்ரி 1993 மற்றும் 2015 ஆம் ஆண்டிற்கு இடையில் 20 வருடங்களுக்கு மேலாக விமானப்படையின் விமானியாக பணியாற்றினார். அந்த நேரத்தில் அவர் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் பல போர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சௌத்ரி ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷனில் பிராந்தியங்கள் மற்றும் மைய செயல்பாடுகள் மற்றும் வணிக இடத்தின் அலுவலகத்தில் மூத்த அதிகாரியாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.
பின்னர் ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவுவாசிகள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுவதற்காக அவர் ஜனாதிபதி ஒபாமாவால் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.