உலகம் இதை பயன்படுத்தத் தொடங்கி 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜப்பான் அதன் முதல் கருக்கலைப்பு மாத்திரையை அங்கீகரித்துள்ளது.
கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்த முதல் முறையாக ஜப்பான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக உலகில் பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வரும் நிலையில், ஜப்பான் அரசு தற்போது தான் முதல் முறையாக கருக்கலைப்பு மாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது.
மாத்திரைக்கு ஒப்புதல்:
அதன்படி, நாட்டின் முதல் கருக்கலைப்பு மாத்திரையான மெஃபீகோவுக்கு (Mefeego) ஜப்பான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜப்பானிய சுகாதார அமைச்சகத்தின் மருந்து விவகாரங்கள் மற்றும் உணவு சுகாதார கவுன்சிலின் துணைக்குழு, பிரிட்டனின் Linepharma International Ltd – Mefeego மாத்திரை பேக் உருவாக்கிய கருக்கலைப்பு மாத்திரைக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று ஜப்பான் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீண்ட கால போராட்டம்:
இது ஜப்பானியர்களின் நீண்ட கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்பதாகும். ஏறக்குறைய 80 நாடுகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் உள்ளன, மிகவும் பாரம்பரியமான நாடான ஜப்பான், இந்த அம்சத்தில் பின்தங்கியிருப்பதாக நீண்ட காலமாக விமர்சிக்கப்படுகிறது. கருக்கலைப்பு மாத்திரைக்கு அனுமதி கோரி ஜப்பானியர்கள் நீண்ட காலமாக கடும் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் அனுமதி:
இதனிடையே, அமெரிக்காவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்த கருக்கலைப்பு மாத்திரையான மைஃபெப்ரிஸ்டோனை தற்காலிகமாக பயன்படுத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தடை விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து மாத்திரையை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.