லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!
இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் அமெரிக்ககா தேடி வந்த ஹிஸ்புல்லா அமைப்பின் படைத்தளபதி இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டுள்ளார்.
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் லெபனான் நாட்டின் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லாவின் முக்கிய படை தளபதியான இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டுள்ளார்.
இவரை அமெரிக்கா நாடு தீவிரமாக தேடிவந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 66 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அதில் 9 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் எனவும் லெபனான் நாட்டின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 1980-ம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மக்கள் பணய கைதிகளாக கடத்தப்பட்டார்கள். அதில் ஹிஸ்புல்லாவின் முக்கிய புள்ளியான இப்ராஹிம் அகிலுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனால் அமெரிக்கா அவரை தீவிரமாக தேடி வந்தது.
இது ஒரு காரணமாக பார்த்தாலும், அதுமட்டுமின்றி கடந்த 1983-ம் ஆண்டு லெபனானில் உள்ள பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகம் மற்றும் மரைன் முகாம்கள் மீது நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் அமெரிக்காவை சேர்ந்த 100-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்கள்.
இந்த தாக்குதல் தான் இப்ராஹிம் அகிலை தீவிரமாக தேடுவதற்கு மேலும் ஒரு காரணமாக அமெரிக்காவுக்கு அமைந்தது. மேலும், பல முறை இப்ராஹிம் அகில் அமெரிக்காவிடம் பிடிபடாமல் தப்பி வந்த நிலையில் நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
இதனால், அமெரிக்கா சற்று நிம்மதி அடைந்துள்ளனர் என்றே கூறலாம். ஏற்கனவே, பேஜர், வாக்கி-டாக்கி போன்ற உபகரணங்கள் வெடித்து சிதறிய சம்பவமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில். 3-வது தாக்குதலாக நடந்த இந்த வான்வெளி தாக்குதல் மேலும் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.