ரஷ்யாவில் 50 பயணிகளுடன் சென்ற விமானம் மாயம்.!
ரஷ்யாவின் தூர கிழக்கில் அங்காரா ஏர்லைன்ஸால் இயக்கப்படும் பயணிகள் விமானம் ஒன்று குழந்தைகள் உட்பட சுமார் 50 பேருடன் காணாமல் போனது.

சைபீரியா : ரஷ்யாவில் 50 பயணிகளுடன் சென்ற An-24 விமானம், சைபீரியாவைச் சேர்ந்த அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்பட்டு, சீன எல்லையோரமுள்ள அமூர் பகுதியிலுள்ள டின்டா நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, இன்று திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.
இந்தப் பகுதி மாஸ்கோவிலிருந்து கிழக்கே சுமார் 6,600 கி.மீ தொலைவில் உள்ளது. இதில் 43 பயணிகள் (அதில் 5 குழந்தைகள் உட்பட) மற்றும் 6 பணியாளர்கள் இருந்தனர். விமானம் ரேடாரிலிருந்து மறைந்ததைத் தொடர்ந்து, அமூர் பகுதியில் தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வெளியான செய்தியின்படி, இந்த விமானம் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் வானிலை, அல்லது தொழில்நுட்பக் கோளாறு ஆகியவை சாத்தியமான காரணங்களாகக் கருதப்படுகின்றன. உயிரிழப்புகள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆண்டு செப்டம்பரில், அதே அமுர் பகுதியில் பதிவு செய்யப்படாத விமானத்தின் போது மூன்று பேருடன் சென்ற ராபின்சன் R66 ஹெலிகாப்டர் காணாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.