வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.!
இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளது என் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைய வாய்ப்புள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடற்கரைப் பகுதிகளை நோக்கி செல்லக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது, குறிப்பாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்யலாம்.
மேலும், மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு- மத்திய-வடக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.