ஈரான் :அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அந்நாட்டில் தற்போது இருக்கும் இந்திய குடிமக்கள் உடனடியாக ஈரானை விட்டு வெளியேற வேண்டும் என்றும், புதிய அறிவிப்பு வரும் வரை ஈரானுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ஈரானில் நிலவும் அரசியல் அமைதியின்மை மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள் மற்றும் அரசு பதிலடி நடவடிக்கைகள் காரணமாக சாலை மறியல்கள், இணையத் தடை, பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தம் போன்ற சூழல்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் இந்திய குடிமக்களின் பாதுகாப்பு அபாயகரமான நிலையில் உள்ளது என்று அமைச்சகம் எச்சரித்துள்ளது. ஈரானில் தற்போது வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக தங்கள் பயண ஆவணங்களை (பாஸ்போர்ட், விசா, டிக்கெட்டுகள்) தயாராக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூதரகம் தற்போது தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளது என்றும், அவசர காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளன.இந்த அறிவுறுத்தல் ஈரானில் பயணம் திட்டமிட்டுள்ள இந்தியர்களுக்கும், அங்கு தற்போது இருக்கும் மாணவர்கள், தொழிலாளர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும். வெளியுறவு அமைச்சகம், சூழல் மேம்படும் வரை ஈரானுக்கு பயணத்தை தவிர்க்குமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
