ரஷ்யா நிலநடுக்கம் : ஹவாய் தீவில் சுனாமி தாக்குதல்..துறைமுகம் மூடல்!
ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் ஹவாய் தீவில் சுனாமி அலைகள் தாக்கியது.

கம்சாட்கா : ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கம், பசிபிக் பெருங்கடலில் 19.3 கி.மீ ஆழத்தில், பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரத்திலிருந்து 125 கி.மீ கிழக்கு-தென்கிழக்கில் மையம் கொண்டிருந்தது. இதனால், ஜப்பான் மற்றும் ரஷ்யாவின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கொடுத்திருந்த தகவலின் படி 1 முதல் 3 மீட்டர் உயர சுனாமி அலைகள் ஜப்பானின் பசிபிக் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கக்கூடும் என்றும், ரஷ்யாவின் கம்சாட்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் உயர அலைகள் பதிவாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஹவாய், குவாம், பிலிப்பைன்ஸ், மற்றும் பிற பசிபிக் தீவுகளுக்கும் 0.3 முதல் 3 மீட்டர் உயர அலைகளுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எச்சரிக்கை விடப்பட்டது போலவே ஹவாய் தீவில் சில இடங்களில் இன்று சுனாமி அலை தாக்கியது. கஹுலுய், மவுயில் (Kahului, Maui) 6.92 அடி (தோராயமாக 2.1 மீட்டர்) உயரமான அலை பதிவாகியது. ஹலேயிவா, ஓஹுவில் (Haleiwa, Oahu) 4 அடி (தோராயமாக 1.2 மீட்டர்) உயரமான அலை பதிவாகியது. இதன் விளைவாக, ஹவாயில் உள்ள அனைத்து வணிகத் துறைமுகங்களும் மூடப்பட்டு, வரும் கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும், மவுய் தீவில் உள்ள கஹுலுய் விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன, இதனால் சுமார் 200 பயணிகள் விமான நிலையத்தில் தங்கியுள்ளனர். ஹவாயைத் தொடர்ந்து, அலாஸ்காவின் அலூஷியன் தீவுகளில் 1 அடி (0.3 மீட்டர்) உயரமான அலைகள் பதிவாகியுள்ளன, மேலும் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியான செவிரோ-குரில்ஸ்கில் 3 முதல் 5 மீட்டர் உயரமான அலைகள் தாக்கி, வெள்ளம் மற்றும் கட்டிட சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. ஜப்பானின் ஹொக்கைடோ மற்றும் ஹொன்ஷு தீவுகளில் 60 செ.மீ உயரமான அலைகள் பதிவாகியுள்ளன.
சுனாமி எச்சரிக்கைகள்
சீனா (ஷாங்காய் மற்றும் ஜெஜியாங் பகுதிகளுக்கு), பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, சிலி, ஈகுவடார், பெரு, குவாம், கோஸ்டாரிகா, மெக்ஸிகோ, பனாமா மற்றும் தைவான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில், வடக்கு கலிபோர்னியாவின் கேப் மெண்டோசினோ முதல் ஒரேகான் எல்லை வரை சுனாமி எச்சரிக்கை உள்ளது,மற்ற பகுதிகளுக்கு ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளது.
சிலியில் 1-3 மீட்டர் உயர அலைகளும், ஈகுவடாரின் கலாபகோஸ் தீவுகளில் 1.4 மீட்டர் அலைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.ஹவாய் ஆளுநர் ஜோஷ் க்ரீன், இதுவரை பெரிய அளவிலான அலைகள் தாக்கவில்லை என்றாலும், அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை எச்சரிக்கை நீடிக்கும் எனக் கூறியுள்ளார்.