ஜடேஜா வாஷிங்டனை சதம் அடிக்க விடாமல் அவுட் ஆக்கியிருக்கணும்..! நாதன் லயன் பேச்சு!
ஜடேஜாவையும் வாஷிங்டனையும் சதம் அடிக்க விட்டது தவறு என ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே 4 போட்டிகள் முடிந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இந்த தொடரின் 5-வது போட்டி நாளை (ஜூலை 31) லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடர சமநிலை செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய அணி களமிறங்குகிறது.
4-வது போட்டி முடிந்து 5-வது போட்டியே தொடங்கவிருக்கும் நிலையில், 4-வது போட்டியில் நடந்த சர்ச்சை இன்னும் முடியவில்லை. ஏனென்றால், இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்டின் இறுதி நாளில் (ஜூலை 27, 2025), இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடையே ஏற்பட்ட மோதல் பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருவதால் கிரிக்கெட் வட்டாரத்தில் இந்த விஷயமானது ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
போட்டியில் ஜடேஜா (89*) மற்றும் வாஷிங்டன் (80*) ஆகியோர் தங்கள் சதங்களை நெருங்கியிருந்தபோது, ஸ்டோக்ஸ் ஆட்டத்தை ட்ராவுக்கு முடித்துக்கொள்ள கைகுலுக்க முயன்றார். ஆனால், இந்திய வீரர்கள் மறுத்து, அதெல்லாம் முடியாது போய் பந்து வீசு என தங்கள் சதங்களை பூர்த்தி செய்தனர். இதனால் ஸ்டோக்ஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஸ்டோக்ஸ் செய்தது தவறு என பலரும் பேசி வரும் நிலையில், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் இது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்தார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர் ” என்னைப்பொறுத்தவரை இங்கிலாந்து அணி இந்திய வீரர்களை அவுட்டாக்கி, அவர்களை சதம் அடிக்க விடாமல் தடுத்திருக்க வேண்டும். ட்ரா செய்யலாம் என்று கூறுவதற்கு பதிலாக ஜடேஜாவையும் வாஷிங்டனையும் அவுட் ஆக்கியிருக்கலாம். அவர்களை சதம் அடிக்க விட்டது தான் தவறு,” என்று கூறினார்.மேலும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி தன்னை தாக்குதலாக எதிர்கொள்ள முயலும் என்று எதிர்பார்ப்பதாகவும், அதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இது பற்றி பேசிய அவர் “எல்லா அணிகளும் சுழற்பந்து வீச்சாளரை தாக்க முயல்கின்றன. இது என்னை ஆட்டத்தில் மேலும் ஈடுபடுத்தும். ஆஷஸில் சில புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளேன்” என கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” லயன், இங்கிலாந்தின் ‘பாஸ்பால்’ விளையாட்டு முறையை பாராட்டினார். “இங்கிலாந்து அணியின் ஆட்டம் அற்புதமான கிரிக்கெட் தருகிறது. பாஸ்பால் இப்போது சற்று மாறியுள்ளது; அவர்கள் ஆக்ரோஷமாக ஆடுவதை விட, ஆட்டத்தை வெல்லும் உத்திகளை பயன்படுத்துகின்றனர்” எனவும் பாராட்டி பேசினார்.