பாகிஸ்தானில் காவலர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் போலீசார் மீது நடந்த தற்கொலைப்படை குண்டுவெடிப்பில், 9 போலீசார் உயிரிழந்துள்ளனர், மற்றும் பலர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் சிபி மற்றும் கச்சி எல்லையை ஒட்டிய பலுசிஸ்தானின் போலன் பகுதியில் உள்ள காம்ப்ரி பாலத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையின் முடிவில் இது தற்கொலைப்படைகள் நடத்திய தாக்குதல் சம்பவம் என்றும் மேலும் இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சிறப்பு பிரிவைச்சேர்ந்த காவல்துறையான பலுசிஸ்தான் கான்ஸ்டபுலரி, முக்கியமான பகுதிகளில் மற்றும் பல முக்கிய நிகழ்வுகளில் பாதுகாப்பு வழங்கும் சிறப்பு காவல் துறையாகும்.
இந்த துறையைச்சேர்ந்த காவலர்கள் பணியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும் போது இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது, மேலும் இந்த தாக்குதலில் போலீசார் பயணித்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 9 போலீசார் உயிரிழந்துள்ளனர். தற்கொலைப் படையைச்சேர்ந்த ஒருவர் பைக்கில் வந்து வாகனத்தின் மீது மோதி இந்த தாக்குதலை நடத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் 15 போலீசார் பலத்த காயமடைந்துள்ளதாக கச்சி எஸ்.எஸ்.பி மெஹ்மூத் கான் தெரிவித்தார். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பலுசிஸ்தான் முதல்வர் மிர் அப்துல் குதூஸ் பிசென்ஜோ, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.