உக்ரைன் நாட்டில் நீர் தேக்க அணை தகர்ப்பு.! இரு நாட்டு ராணுவமும் ஒருவர் மீது ஒருவர் புகார்.!

உக்ரைன் நாட்டில் டினிப்ரோ ஆற்றின் மீதுள்ள ககோவ்கா அணை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்தை தண்டிவிட்டது. இன்னும் அவ்வப்போது இரு நட்டு ராணுவமும் தங்கள் தாக்குதல்களை எதிர் நாட்டின் மீது நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பாமல் இருக்கிறது.
இந்நிலையில், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் அமைந்துள்ள நீர் தேக்க அணையானது அண்மையில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இரு நாட்டு ராணுவமும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தெற்கு உக்ரைன் பகுதியில் டினிப்ரோ ஆற்றின் மீது ககோவ்கா அணையானது கடந்த 1956இல் கட்டப்பட்டது. இந்த அணை, 30 மீட்டர் உயரமும், 3.2 கிமீ நீளமும் கொண்டது. ககோவ்கா நீர்மின் நிலையத்தின் ஒரு பகுதியாக இந்த அணை கட்டப்பட்டது. இது 18 கிமீ நீளத்திற்கு நீர்த்தேக்கத்தைக் கொண்டுள்ளது.
இந்த அணையானது 2014இல் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்திற்கும் மற்றும் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கும் தண்ணீரை வழங்கி வருகிறது.
தற்போது ரஷிய கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த யானைமீது நடத்தப்பட்டு இருக்கும் தாக்குதல் காரணமாக அங்கு அதிகளவு நீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெள்ள அபாயத்தில் இருக்கின்றனர். இந்த தாக்குதலை ரஷ்ய ராணுவம் நடத்தியதாக உக்ரைனும், உக்ரைன் ராணுவம் தாக்கியதாக ரஷ்யாவும் புகார் கூறி வருகின்றனர்.