ஆப்கானிஸ்தானில் கடந்த ஆட்சியின்போது பெண்களுக்கு வழங்கப்பட்ட விவாகரத்து செல்லாது என்று தலிபான்கள் அரசு உத்தரவு
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினர். தாலிபான்கள் கையில் ஆப்கானிஸ்தான் ஆட்சி சென்றது முதற்கொண்டு அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கடுமையான சட்ட திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
பெண்கள் வெளியில் செல்வதற்கும், ஆடை அணிவதற்கும், கல்வி பயில்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது பெண்களின் உடலிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
விவாகரத்து செல்லாது
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, பெண்கள் கருத்தடை சாதனம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது, ஆப்கானிஸ்தானில் கடந்த ஆட்சியின்போது பெண்களுக்கு வழங்கப்பட்ட விவாகரத்து செல்லாது என்று தலிபான்கள் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், கணவர்களுடன் சேர்ந்து வாழ பெண்களை வலுக்கட்டாயமாக தாலிபான் அரசு அனுப்பி வைக்கும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கணவர் மதுவுக்கு அடிமையாகி இருந்தாலோ, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றிருந்தாலோ மட்டும் விவாகரத்து செல்லுபடியாகும் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே, ஐ.நா தரப்பில், ஆப்கனிஸ்தானில் 10ல் 9 பெண்கள் தங்கள் கணவர்களால் கொடுமைக்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.