அமைதிப் பரிசுக்கு டிரம்ப் தான் தகுதியானவர் - வெள்ளை மாளிகை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு FIFA அமைதிப் பரிசு வழங்கப்பட்டதற்கு எதிராக எழுந்த விமர்சனங்களுக்கு வெள்ளை மாளிகை கடும் பதிலடி கொடுத்துள்ளது.

Hero Image

வாஷிங்டன் : கடந்த டிசம்பர் மாதம் உலகக் கோப்பை வரைவு நிகழ்ச்சியின்போது, FIFA தனது முதல் அமைதிப் பரிசை (FIFA Peace Prize) ட்ரம்புக்கு வழங்கியது. “உலக அளவில் அமைதியையும் ஒற்றுமையையும் ஊக்குவித்ததற்காக” என்று காரணம் கூறப்பட்டது. இந்த அறிவிப்பு மனித உரிமை அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ஜாக்சன் இர்வின், “இந்தப் பரிசு FIFA-வின் மனித உரிமைக் கொள்கையை கேலிக்கூத்தாக்குகிறது” என்று விமர்சித்தார். நார்வே கால்பந்து கூட்டமைப்பும் இந்தப் பரிசை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.இந்த விமர்சனங்களுக்கு வெள்ளை மாளிகை சார்பில் வலுவான பதிலடி அளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டேவிஸ் இங்கிள் வெளியிட்ட அறிக்கையில்,“உலகில் FIFA-வின் முதல் அமைதிப் பரிசுக்கு டொனால்ட் ட்ரம்பைவிட தகுதியானவர் வேறு யாரும் இல்லை. இதை எதிர்க்கும் எவரும் கடுமையான ‘ட்ரம்ப் வெறுப்பு நோயால்’ (Trump Derangement Syndrome) பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.

மேலும், ட்ரம்பின் “அமைதிக்கான வலிமை” (Peace through Strength) என்ற வெளியுறவுக் கொள்கை, கடந்த ஒரு ஆண்டுக்குள் எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் வாதிடப்பட்டது.இந்தப் பரிசு அறிவிப்பு, அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இணைந்து ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடத்தவுள்ள 2026 உலகக் கோப்பைக்கு முன்பாக வந்துள்ளது.

இதே காலகட்டத்தில் அமெரிக்கா வெனிசுலாவுக்கு எதிராக இராணுவத் தாக்குதல் நடத்தியதும், பிப்ரவரி 28 அன்று இஸ்ரேலுடன் இணைந்து ஈரானுக்கு எதிராக வான்வழித் தாக்குதல் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.ட்ரம்ப் பல முறை தான் உலக அமைதிக்கு பங்களித்ததாகக் கூறி, நோபல் அமைதிப் பரிசுக்கு தானே தகுதியானவர் என்று வலியுறுத்தி வருகிறார்.