ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் - டிரம்ப் எச்சரிக்கை!

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் சில நாட்களுக்குள் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் என டிரம்ப் கூறியுள்ளார்.

Hero Image

வாஷிங்டன் : அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் சில நாட்களுக்குள் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதற்கு பதிலளித்த ஈரான் “அப்படி நடந்தால் புதிய முனைகளில் தாக்குதல் நடத்தப்படும்” என்று கடுமையாக எச்சரித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ஈரான் தொடர்பாக முடிவு எடுக்க நான் ஒரு மணி நேர தூரத்தில் இருந்தேன். ஆனால் பேச்சுவார்த்தை முன்னேறி வருவதாக வளைகுடா நாடுகள் தகவல் தெரிவித்ததால், மேலும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்க ஒப்புக்கொண்டேன்” என்று கூறினார்.

அதேநேரத்தில், “இராணுவ நடவடிக்கை இன்னும் மேசையில்தான் உள்ளது. அது வெள்ளிக்கிழமை இருக்கலாம், வார இறுதியில் இருக்கலாம் அல்லது அடுத்த வார தொடக்கமாக இருக்கலாம். ஈரானுக்கு புதிய அணு ஆயுதம் கிடைக்க அனுமதிக்க முடியாது” என்றும் டிரம்ப் எச்சரித்தார்.

மேலும், “ஈரான் தலைவர்கள் ஒப்பந்தம் செய்ய வேண்டுமென கெஞ்சுகிறார்கள்” என்றும் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் அதுகுறித்து கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை குறிப்பிட்ட டிரம்ப், “முந்தைய முறைகளில் ஒப்பந்தத்திற்கு அருகில் சென்றதாக நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. இந்த முறை நிலைமை கொஞ்சம் வேறுபட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.

மேலும், போர் மீண்டும் வெடிக்கும் சூழ்நிலை உருவாகலாம் என்ற அச்சத்தில், இஸ்ரேல் ராணுவமும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இஸ்ரேல் அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் அளிக்கவில்லை.

தற்போது அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் இந்த பதற்றம் மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பெரிய மோதலாக மாறுமா என்ற அச்சத்தை உலக நாடுகள் கவனத்துடன் பார்த்து வருகின்றன.

ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் - டிரம்ப் எச்சரிக்கை!