வாஷிங்டன் : அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பல மாதங்களாக நீடித்து வந்த மோதலுக்கு இடைக்கால தீர்வாக, இரு நாடுகளின் அதிபர்களும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். எனினும், ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் மீறினால் மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்கமாட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றிருந்த டிரம்ப், செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஈரான் ஒப்பந்தத்தை மதித்து நடக்க வேண்டும். அவர்கள் அதை மீறினால் மீண்டும் தாக்குதல்களை நடத்துவோம்" என்று தெரிவித்தார். அதேநேரத்தில், நிரந்தர அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் அடுத்த 60 நாட்களில் நடைபெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்த இடைக்கால ஒப்பந்தத்தின் மூலம், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போர் நிறுத்தம் மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை முழுமையாக மீண்டும் தொடங்குதல், ஈரானுக்கு விதிக்கப்பட்டிருந்த சில தடைகளை தளர்த்துதல், முடக்கப்பட்டிருந்த சொத்துக்களை விடுவித்தல் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீள்கட்டமைக்க முதலீட்டு திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்ற தனது நீண்டகால நிலைப்பாட்டை ஈரான் மீண்டும் உறுதி செய்துள்ளது. மேலும், செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்புகள் தொடர்பாக சர்வதேச அணுசக்தி அமைப்பின் கண்காணிப்பின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய ஈரான் தரப்பு, இராணுவ நடவடிக்கைகள் மூலம் பெற முடியாத பலன்களை பேச்சுவார்த்தை மூலம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக பொருளாதார தடைகள் தளர்த்தப்படுவது மற்றும் முடக்கப்பட்டிருந்த சொத்துக்கள் விடுவிக்கப்படுவது ஈரானுக்கு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச எண்ணெய் சந்தையிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து சீரடையும் என்ற நம்பிக்கையால் கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன. இருப்பினும், டிரம்பின் புதிய எச்சரிக்கை காரணமாக சந்தைகளில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், லெபனானில் ஹெஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஜி7 நாடுகள் வலியுறுத்தியுள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்திருந்தாலும், அந்த பிராந்தியத்தில் பதற்றம் முழுமையாக தணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த ஒப்பந்தம், மத்திய கிழக்கில் நீண்டகால அமைதிக்கான முதல் படியாக அமையுமா அல்லது மீண்டும் மோதலுக்கு வழிவகுக்குமா என்பது வரும் வாரங்களில் தெரியவரும்.
.webp&w=3840&q=75)