ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!
ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளுக்கு 500% சுங்க வரி விதிக்கும் அதிகாரம் வழங்கக்கூடிய சட்ட மசோதாவை அமெரிக்க செனட் நிறைவேற்றியது.

வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 40% ரஷ்யாவிடம் இருந்துதான் இந்தியா வாங்கி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளுக்கு 500% சுங்க வரி விதிக்கும் அதிகாரம் வழங்கக்கூடிய சட்ட மசோதாவை நிறைவேற்றியது அமெரிக்க செனட்.
இது தொடர்பான மசோதாவை செனட்டில் முன்மொழிந்து, வாக்கெடுப்புக்கு கொண்டு வர வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் தன்னிடம் கூறியதாக அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியளித்த லிண்ட்சே கிரஹாம், இந்த மசோதாவை முன்மொழிந்தவர் தான் என்பதால் இது தனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,இந்த மசோதாவின் நோக்கம் என்ன? நீங்கள் ரஷ்யாவிலிருந்து பொருட்களை வாங்குகிறீர்கள், உக்ரைனுக்கு உதவவில்லை என்றால், உங்கள் தயாரிப்புகள் அமெரிக்காவிற்குள் வரும்போது 500 சதவீத வரிக்கு உட்பட்டதாக இருக்கும். இந்தியாவும், சீனாவும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெயில் மட்டுமே 70 சதவீதத்தை வாங்குகின்றன, இதன் மூலம் அவை ரஷ்யாவின் போர் இயந்திரத்திற்கு எரிபொருளாகின்றன.
இதனால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் பிற பொருட்களை வாங்குவதை நிறுத்த இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது அழுத்தம் கொடுப்பதே தனது மசோதாவின் நோக்கம் என்று கிரஹாம் ஒப்புக்கொண்டார். இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் பலவீனமடைந்து, மாஸ்கோவை உக்ரைனில் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஊக்குவிக்க முடியும் என்றார்.