மீண்டும் வெடித்த வன்முறை...வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை!

வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sharif Osman Hadi

டாக்கா :வங்கதேசத்தில் மாணவர் அமைப்பான இன்கிலாப் மஞ்சாவின் தலைவர் ஷரீஃப் ஒஸ்மான் ஹதி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. டிசம்பர் 18 இரவு முதல் தொடங்கிய போராட்டங்கள், தாக்குதல்கள், வன்முறைச் சம்பவங்களாக மாறியுள்ளன. இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் ஹதியின் மரணத்தை உறுதிப்படுத்தியதும் வன்முறை தீவிரமடைந்தது. ஹதியின் உடல் சிங்கப்பூரில் இருந்து இன்று வங்கதேசத்துக்கு கொண்டு வரப்பட உள்ளது.

கடந்த வாரம் டாக்காவின் பிஜய்நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியபோது முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் ஹதியைச் சுட்டுக் கொன்றனர். பிப்ரவரி 12, 2026-ல் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் அவர் வேட்பாளராக இருந்தார். இந்தக் கொலைக்குப் பின் போராட்டக்காரர்கள் முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இல்லத்தையும், அவாமி லீக் கட்சி அலுவலகத்தையும் தாக்கி தீ வைத்தனர்.

பல இடங்களில் வாகனங்கள், கடைகள் சேதமடைந்தன.வன்முறை ஊடக அமைப்புகளையும் தாக்கியது. பிரபலமான பத்திரிகைகளான பிரோதோம் அலோ மற்றும் தி டெய்லி ஸ்டார் அலுவலகங்கள் தீ வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. போராட்டக்காரர்கள் இந்திய எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவங்கள் நாடு முழுவதும் பரவியுள்ளதால் பாதுகாப்புப் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

ஹதியின் கொலை, வங்கதேசத்தில் அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இடைக்கால அரசு இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் போராட்டங்கள் தொடர்வதால் அரசியல் சூழல் மேலும் சிக்கலாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா ஆட்சி கவிழ்ந்த பிறகு நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை மீண்டும் தலைதூக்கியுள்ளது.

இந்த வன்முறை வங்கதேசத்தின் அண்டை நாடுகளையும் கவலையடையச் செய்துள்ளது. இந்தியாவுடனான உறவு, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. ஹதியின் மரணம் அரசியல் கொலையாகவே பார்க்கப்படுகிறது. போராட்டங்கள் அமைதியடையுமா அல்லது மேலும் தீவிரமடையுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.