வாஷிங்டன் : அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி வெறும் 22 நாட்களே ஆன நிலையில், அந்த ஒப்பந்தத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார். ஒப்பந்தம் முறிந்த சில மணி நேரங்களிலேயே, ஈரானின் முக்கிய நகரங்கள் மீது அமெரிக்கப் படைகள் நள்ளிரவில் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளன.
ஈரானின் முக்கியத் துறைமுக நகரங்களான பந்தர் அப்பாஸ் (Bandar Abbas), சிரிக் (Sirik) மற்றும் குறிப்பாக இந்தியா அதிக முதலீடு செய்துள்ள சாபஹார் (Chahbahar) துறைமுகப் பகுதிகளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சாபஹாரில் உள்ள ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) இமாம் அலி கடற்படைத் தளம் மற்றும் கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கியுள்ளன.
சாபஹார் மற்றும் கொனாரக் (Konarak) பகுதிகளில் சுமார் 10-க்கும் மேற்பட்ட பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன. இதனால் அப்பகுதிகளில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
நேட்டோ உச்சிமாநாட்டில் பேசிய அதிபர் ட்ரம்ப், "நேற்று இரவு ஈரானைக் கடுமையாகத் தாக்கினோம். இன்று இரவும் அவர்களைக் கடுமையாகத் தாக்கப் போகிறோம். ஈரான் ஒரு முறை தாக்கினால், நாங்கள் 20 மடங்கு மிகக் கடுமையான பதிலடி கொடுப்போம்" என்று மிரட்டல் விடுத்துள்ளார். ஹார்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்களை ஈரான் தொடர்ந்து அச்சுறுத்துவதே இந்த மோதலுக்குக் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப், "அமெரிக்காவின் இந்த மிரட்டல்களுக்கு நாங்கள் பணியப்போவதில்லை. ஹார்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அமெரிக்கா வீணாகப் போராடித் தன் அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாம்" என்று எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடித் தாக்குதல்கள், கச்சா எண்ணெய் விலையை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கிடையிலான அரசியல் உறவுகளையும் மீண்டும் ஒரு சிக்கலான நிலைக்குத் தள்ளியுள்ளது.
