#ElectionBreaking: 5 அம்ச கோரிக்கைகளுடன் திமுக கூட்டணிக்கு ஆதரவு – தமிமுன் அன்சாரி அறிவிப்பு

The Humanitarian Democratic Party supports the DMK-led secular coalition with five demands.

திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஐந்து அம்ச கோரிக்கைகளோடு ஆதரவு.

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பேச்சுவார்த்தை நடத்திருந்தார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, தற்போதுள்ள அரசியல் சூழல் மற்றும் தேர்தல் கூட்டணி குறித்தும் விரிவாக விவதித்தோம் என தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து, மனிதநேய ஜனநாயக கட்சி ஐந்து அம்ச கோரிக்கைகளோடு உங்களது கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் நாங்கள் போட்டியிட தொகுதி ஒதுக்கீடு குறித்தும் கோரிக்கை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

மதவாத சக்திகளுக்கு எதிரான வாக்குகள் சிதறி போகக்கூடாது என்ற அடிப்படையில் திமுக கூட்டணிக்கு ஆதரவை வழங்கிருக்கிறோம். ஐந்து அம்ச கோரிக்கைகளில் பத்தாண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களை விடுதலை செய்யவேண்டும். பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். நீதியரசர் சச்சார் கமிட்டி பரிந்துரைகளை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அமல்படுத்த வேண்டும்.

மேலும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி எல்லா சமூக மக்களுக்கும் சமூக நீதியை வழங்கிட வேண்டும். அதேபோல் முஸ்லீம் மக்களின் இடஒதுக்கீட்டை உயர்த்துவது குறித்தும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இறுதியாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டங்களை நிறைவேற்ற மாட்டோம் என்று புதிதாக அமையக்கூடிய அரசு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என 5 அம்ச கோரிக்கைகளை தமிமுன் அன்சாரி முன்வைத்துள்ளார்.