கர்நாடகா தேர்தல்: ஏப்ரல் 29-ம் தேதி பிரதமர் மோடியின் பேரணி... பிரச்சாரத்திற்கு தயாராகும் பாஜக.!

கர்நாடக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29ஆம் தேதி பிரதமர் மோடியின் தலைமையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக தயாராகிறது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29ஆம் தேதி பிரதமர் மோடியின் தலைமையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக தயாராகிறது.

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல், வரும் மே 10ஆம் தேதி நடைபெரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் ஒரே தென் மாநிலமான கர்நாடகாவில், தேர்தலுக்கு முன்னதாக அதன் அனைத்து முயற்சிகளையும் அக்கட்சி எடுத்துவருகிறது.

ஏப்ரல் 29-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகாவிற்கு வருகை தருவதால் கட்சியின் மெகா தேர்தல் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், பிரதமர் மோடி பெலகாவியில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குவார் என்று தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று மூன்று நாள் பயணமாக கர்நாடகா சென்றுள்ளார். ஏப்ரல் 25 ஆம் தேதி, பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள தேரடல், விஜயபுரா மாவட்டத்தில் உள்ள தேவர்ஹிப்பர்கி மற்றும் யாதகிரி ஆகிய இடங்களில் அமித் ஷா பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார்.

பாஜக தலைவர் ஜேபி நட்டாவும், 3 நாள் பயணமாக நாளை கர்நாடகா செல்கிறார், சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டாவில் நடைபெறும் சாலை பேரணியிலும் அவர் பங்கேற்கிறார். கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சியின் தலைவர் ஜேபி நட்டா ஆகிய பாரதிய ஜனதா கட்சியின் பெரிய பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் பாஜக தனது முழு பலத்தையும் செலுத்தியுள்ளது, இதற்காக உத்தரப் பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத், அசாமின் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்தியப் பிரதேசத்தின் சிவராஜ் சிங் சவுகான், மகாராஷ்டிராவின் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் அக்கட்சிக்காக பிரசாரம் செய்யவுள்ளனர்.