வேட்பாளராக அறிவிக்கப்பட்டவருக்கு பொறுப்பு – ஓபிஎஸ் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவருக்கு பொறுப்பு வழங்கி ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவருக்கு பொறுப்பு வழங்கி ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் சார்பாக கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் என்று எடப்பாடி பழனிசாமி கடந்த 1ம் தேதி அறிவித்திருந்த நிலையில், அன்று மாலையே ஈரோடு இடைத்தேர்தலில் தங்கள் சார்பாக செந்தில்முருகன் போட்டியிடுவார் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.

ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்ததால் இரட்டை இலை சின்னம் யாருக்கு அல்லது சின்னம் முடக்கப்படுமா என கேள்விகள் எழுந்தன. இன்று வரை நான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்றும் இரட்டை சின்னம் கிடைப்பதற்கு நான் தடையாக இருக்கமாட்டேன் எனவும் ஓபிஎஸ் கூறியிருந்தார். இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் தங்கள் வேட்பாளரை வாபஸ் பெறுவோம் என்றும் அப்படி இல்லையெனில் உறுதியாக தமது தரப்பு வேட்பாளர் போட்டியிடுவார் எனவும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆதரவு நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் போட்டியில் இருந்து பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற போவதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனிடையே, தேர்தலில் அதிமுக சார்பில் இபிஎஸ் தரப்பு தென்னரசுவை வேட்பாளராக அறிவித்து, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் படிவம் வெளியிட்டார்.

பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு பின்பு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. மறுபக்கம் அதிமுக சார்பில் ஒரே வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தான் பாஜகவின் விருப்பம் என்றும் இபிஎஸ் வேட்பாளரை, ஓபிஎஸ் ஆதரிக்க வேண்டும் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவருக்கு பொறுப்பு வழங்கி ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் அமைப்பு செயலாளராக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த செந்தில் முருகன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.

செந்தில் முருகனுக்கு பொறுப்பு வழங்கியதால், இடைத்தேர்தலில் இருந்து ஓபிஎஸ் தரப்பு வாபஸ் பெற இருப்பதாகவும், அப்போதுதான் இரட்டை இலை சின்னமும் கிடைக்கும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.