காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி மறைவுக்கு சீமான் இரங்கல்.
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி அவர்கள், பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை அவரது இல்லத்தில் கிலானியின் உயிர் பிரிந்துள்ளது.
இவரது மறைவுக்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காஷ்மீரிய தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்காகத் தன் வாழ்நாள் முழுதும் அயராது பாடுபட்டவரும், ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் முக்கியத் தலைவராக விளங்கியவருமான பெரு மரியாதைக்குரிய ஐயா சையது அலி ஷா கிலானி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்ற செய்தியறிந்து பெரிதும் துயருற்றேன்.
காசுமீரிய தேசிய இனத்தின் உரிமைக்காக, தனது வாழ்வின் முற்பகுதியின் பெரும்பங்கை கொடுஞ்சிறையிலும், வயோதிக காலத்தின் பெரும்பங்கை வீட்டுச்சிறையிலும் கழித்த பெருந்தகை.
மண்ணின் உரிமைக்காகப் போராடிய மகத்தான தலைவர் ஐயா சையது அலி ஷா கிலானி மறைவினால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், ஹூரியத் மாநாட்டுக் கட்சியினருக்கும், காஷ்மீர மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node