இபிஎஸ்-க்கு போட்டி நானும் ஓபிஎஸ்-ம் தான்..! திமுக அல்ல..! – டிடிவி தினகரன்

ஜெயலலிதாவின் தொண்டர்களை பலவீனப்படுத்தும் விதமாக இபிஎஸ் செயல்பட்டு வருகிறார் என டிடிவி தினகரன் பேச்சு.

ஜெயலலிதாவின் தொண்டர்களை பலவீனப்படுத்தும் விதமாக இபிஎஸ் செயல்பட்டு வருகிறார் என டிடிவி தினகரன் பேச்சு.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு தேனியில் பங்களாமேடு பகுதியில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது.

ஜெயலலிதா என்னை அறிமுகப்படுத்தியது தேனியில் தான்

இந்த விழாவில் பேசிய டிடிவி தினகரன், நான் பிறந்தது தஞ்சாவூர் மாவட்டமாக இருந்தாலும். ஜெயலலிதா என்னை அறிமுகப்படுத்தியது தேனியில் தான். இங்கு வருவது என்றாலும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தேனியில் ஏப்ரல்-மே மாதத்தில் தங்குவதற்கு வீடு பார்த்து வருகிறேன்.

அரசியலுக்காக அல்ல தேனி மாவட்டத்தில் உள்ள அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திப்பதற்காக என்று தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் சதியால்  2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அந்த சதித் திட்டதை முறியடிக்க, வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெல்வோம். எந்த கொம்பனாலும் நமது கட்சியை அசைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆரின் ஆன்மாவும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் அதை மன்னிக்காது

மேலும், எம்ஜிஆர் ஆரம்பித்த இயக்கத்திற்கு துரோகம் மட்டும் செய்து இன்று பொதுச்செயலாளர் பதவி அடைந்திருப்பது எம்ஜிஆரின் ஆன்மாவும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் அதை மன்னிக்காது. இபிஎஸ்ஸுக்கு தக்க பாடம் கற்பிக்கும் நாள் விரைவில் வரும்.

மேலும் ஜெயலலிதாவின் தொண்டர்களை பலவீனப்படுத்தும் விதமாக இபிஎஸ் செயல்பட்டு வருகிறார். அவருக்கு போட்டி திமுக அல்ல, நானும் ஓபிஎஸ் தான். இரட்டை இலை சின்னத்தை வைத்து எடப்பாடி பழனிசாமி மக்களை ஏமாற்ற முடியாது. மக்களே அதை பிடுங்கி தூக்கி எறிய போகிறார்கள். அப்போது நாம் அதை மீட்டெடுப்போம் என தெரிவித்துள்ளார்.