இன்று மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் மாநிலங்களவையில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், மிகப்பெரிய தவறை இந்த அவை இன்று செய்துள்ளது. எதிர்கால சந்ததியினருக்காக, நான் உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன்.
மாநிலத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. மக்களின் உரிமையை காக்க வேண்டியது அரசின் மிகப்பெரிய கடமை ஆகும். வெற்றி பெற்றதாக நினைக்க வேண்டாம்; இது ஒரு வரலாற்றுப் பிழை ஆகும். 370 ரத்து மூலம் கல்லறை கட்டிவிட்டதை வருங்கால சமுதாயம் உணரும்.
370-ல் திருத்தம் கொண்டு வரலாமே தவிர, ரத்து செய்வது முறையாக இருக்காது.இந்திய வரலாற்றில் இது ஒரு துக்க தினம்.காஷ்மீர் விவகாரத்தில் வெற்றி பெற்றதாக பாஜக அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் பாஜக அரசு தோற்றுவிட்டது என வரலாறு நிரூபிக்கும்.இன்று காஷ்மீருக்கு நடந்தது நாளை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் நடக்கலாம் .ஜம்மு-காஷ்மீரை போல நாளை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களும் பிரிக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்