தரம்சாலாவில் நடைபெறுவதாக இருந்த மூன்றாவது பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி தரம்சாலாவில் உள்ள ஹெச்பிசிஏ மைதானத்தில் மார்ச் 1-5 வரை நடைபெறுவதாக இருந்த நிலையில் மைதானத்தின் பணிகள் நிறைவடையாததால் வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹெச்பிசிஏ மைதானம் வடிகால் புதுப்பிப்பு பணிகள் முடிவடைந்து பார்டர்-கவாஸ்கர் தொடருக்கு முன்னதாக தயாராகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மைதானம் இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்பதால் மூன்றாவது போட்டி வேறு மைதானத்திற்கு மாற்றப்படலாம் என்றும் பிசிசிஐ தரப்பில் இந்தூர், விசாகப்பட்டினம், ராஜ்கோட், புனே மாற்று மைதானங்களாக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்தன. இதில் ஒரு மைதானத்திற்கு போட்டி மாற்றப்படும்.
போட்டிக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருப்பதால் பிசிசிஐ தரப்பில் மைதானத்தை ஆய்வு மேற்கொண்டு அதன்பிறகு போட்டி இதே மைதானத்தில் நடைபெறுமா அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்படுமா என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இந்த மைதானத்தில் இந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற்ற டி-20 போட்டிக்கு பிறகு இங்கு இன்னும் எந்த போட்டியும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.