ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற இறுதிநாளான இன்று 174 ரன்கள் தேவை.
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்கி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் போட்டி கடந்த ஜூன் 16இல் தொடங்கிய நிலையில் இறுதிநாளான இன்று ஆஸ்திரேலியா வெற்றி பெற 174 ரன்கள் தேவைப்படுகிறது, அதே நேரம் இங்கிலாந்து அணி வெற்றி பெற 7 விக்கெட்கள் தேவைப்படுகிறது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் ஜோ ரூட்டின் சதத்துடன் 393/8 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. ஆஸ்திரேலிய அணியில் லியொன் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியும் 386 ரன்கள் குவித்தது, அதிகபட்சமாக க்வாஜா 141 ரன்கள் குவித்தார்.
இங்கிலாந்து அணி சார்பில் பிராட் மற்றும் ராபின்சன் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். 7 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் மற்றும் லியொன் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்நிலையில் 2-வது இன்னிங்சில் 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 107/3 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. க்வாஜா 34* ரன்களுடனும், போலந்து 13* ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர். இன்று இறுதிநாளில் வெற்றி யார் பக்கம் வேண்டுமானாலும் போகலாம் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை.
