Asia Cup 2023 : தொடர்ந்து 3வது நாளாக களம் காணும் இந்தியா.! இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை.!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கொண்டு லீக் சுற்றுடன் கடந்த மாதம் 30 ஆம் தேதி துவங்கிய இந்த தொடர் தற்போது இறுதி போட்டியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தற்போது சூப்பர் 4 சுற்று போட்டியானது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
இதில் இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் மோத உள்ளன. இதில் இந்திய அணியானது இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக களமிறங்க உள்ளதால், இன்றும் அதே போல வீரர்கள் உத்வேகத்துடன் விளையாடுவார்களா அல்லது சற்று சோர்ந்து இருப்பார்களா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
நேற்று முன்தினம் கொழும்புவில் உள்ள மைதானத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலுமான பாகிஸ்தான் அணியும் மோதின. ஆனால் அன்றைய தினம் மழை பெய்யும் என கணிக்கப்பட்டதால் ரிசர்வ் டே திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
வானிலை மையம் கூறியது போல மழை பெய்து ஆட்டம் இந்திய அணி பேட்டிங் செய்யும் போது பாதியிலேயே நிறுத்தப்பட்டு, நேற்று மீண்டும் அதே மைதானத்தில் ஆட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நேற்று முன்தினம் விட்ட இடத்தில் இருந்து துவங்கிய இநதிய அணி பாகிஸ்தானுக்கு எதிராக அபாரமாக விளையாடி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
இதன்படி பார்த்தால், இந்திய கிரிக்கெட் அணி இன்று தொடர்ந்து 3வது நாளாக விளையாட உள்ளது. இருந்தும் இந்திய அணி அதே உத்வேகத்துடன் களமிறங்கும் என்று அதே ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இன்று இந்திய அணி சார்பில் கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்குவார்கள் என்றும்,
இலங்கை அணி சார்பில் கேப்டன் தசுன் ஷனக, பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, மதீஷ பத்திரன ஆகியோர் களமிறங்குவர்ர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .