குஜராத்தை துவம்சம் செய்த டெல்லி! இது தான் டார்கெட்!
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 203 ரன்கள் குவித்துள்ளது.

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி அதிரடியாக தங்களுடைய பேட்டிங்கை ஆரம்பித்தது என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் போரெல் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அவரைப்போலவே, கே.எல்.ராகுலும் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
இருப்பினும் கருண் நாயர் வழக்கம் போல கொஞ்சம் அதிரடியாக விளையாடினார் என்று சொல்லலாம். 2 சிக்ஸர் 2 பவுண்டரி என 31 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் டெல்லி அணி 93 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்திருந்தது. அடுத்ததாக அக்சர் படேல் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினார்கள் என்று சொல்லலாம்.
இந்த அதிரடி கடைசி ஓவர்கள் வரை தொடருமா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பவுண்டரி அடிக்க நினைத்து சிராஜ் வீசிய பந்தில் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் ஆட்டமிழக்கும்போது 14.2 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்திருந்தது. அவர் ஆட்டமிழந்தாலும் அணியின் கேப்டன் அக்சர் படேல் நிதானமாக கடைசி வரை களத்தில் நிற்கவேண்டும் என்பது போல விளையாடி கொண்டு இருந்தார்.
அப்போது அவருடைய காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக கொஞ்சம் தடுமாறி விளையாடினார். ஆனால், மற்றொரு முனையில் நின்றுகொண்டு இருந்த அசுதோஷ் சர்மா அதிரடியாக விளையாடி கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் பொறுமையாக இருந்த அக்சர் படேல் 17 வது ஓவரின் முதல் பந்தில் பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்து 38 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் அசுதோஷ் சர்மா அதே ஓவரில் 2 சிக்ஸர் விளாசி அதிரடி கட்டிக்கொண்டு இருந்தார்.
ஆனால், கடைசி ஓவரில் அவர் திணற டெல்லி அணி சரிந்தது என்று சொல்லலாம். 37 ரன்களுக்கு அவரும் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் இறுதியாக டெல்லி அணியின் அதிரடி ஆட்டம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி 203 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்ததாக 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கவுள்ளது. மேலும், குஜராத் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக சிறப்பாக பந்துவீசி பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.