டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!
இந்திய எல்லைக்குள் குறிவைத்து பாகிஸ்தான் 26 ட்ரோன்களை ஏவியது என்றும், அதனை இந்திய ராணுவம் அழித்துள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதன் காரணமாக எல்லை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தொடர தாக்குதல்களுக்கும் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக பகல் நேரத்தை காட்டிலும் இரவு நேரத்தில் தான் தாக்குதல்கள் அதிகமாக இருக்கின்றன.
நேற்று இரவு இந்தியா எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. அதனை இந்திய ராணுவம் முறியடித்து இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் ஒரு தாக்குதலை கூட நிகழ்த்த விடாமல் தடுத்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
அதில், நேற்று இரவு மட்டும் பாகிஸ்தானில் இருந்து 26 ட்ரோன்கள் நமது நாட்டு எல்லைக்குள் தாக்குதல் நடத்த ஏவப்பட்டன என்றும், அதனை நமது ராணுவம் தடுத்து அழித்தது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் உள்ள பாரமுல்லாவிலிருந்து தெற்கில் உள்ள பூஜ் வரை சர்வதேச எல்லை பகுதியில் உள்ள 26 இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன்கள் காணப்பட்டுள்ளன என்றும், பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபோரா, நக்ரோட்டா, ஜம்மு, ஃபெரோஸ்பூர், பதான்கோட், ஃபாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சால்மர், பார்மர், பூஜ், குவார்பெட் மற்றும் லக்கி நாலா உள்ளிட்ட பகுதிகளை பாகிஸ்தான் இலக்கு வைத்து தாக்குதல் நடத்த முயற்சித்த இடங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஃபெரோஸ்பூரில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர் என்றும் சிலருக்கு படு காயங்கள் ஏற்பட்டது என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எல்லை பகுதியில் உள்ள பொதுமக்கள் அரசு அறிவுறுத்தலின்படி பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர்.