டிஎன்பிஎல் தொடரின் இன்றைய MADURAI vs LKK போட்டியில், கோவை கிங்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கிய போட்டியில் சீசெம் மதுரை பாந்தர்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் கம்பெனி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட் செய்ய களமிறங்கிய கோவை அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தனர். இதில் சுரேஷ் குமார், சச்சின் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.
இதையடுத்து, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் மதுரை அணியில் முதலில் வாஷிங்டன் சுந்தர், லோகேஷ்வர் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஹரி நிஷாந்த், லோகேஷ்வருடன் இணைந்து இருவரும் அணிக்கு ரன்கள் சேர்த்தனர்.
அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த லோகேஷ்வர் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அதன்பின் களமிறங்கிய ஜெகதீசன் 9 ரன்களில் வெளியேறினார். ஹரி நிஷாந்த் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மதுரை அணியின் வீரர்கள், கோவை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஓரளவு ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
முடிவில், மதுரை அணி 18 ஓவர்களிலேயே அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கோவை அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக லோகேஷ்வர் 41 ரன்களும், ஹரி நிஷாந்த் 33 ரன்களும் குவித்தனர். கோவை அணியில் சித்தார்த் 3 விக்கெட்டுகளையும், ஷாருக் கான் மற்றும் யுதீஸ்வரன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
