ஐபிஎல் தொடரின் இன்றைய டெல்லி மற்றும் கொல்கத்தா மோதிய போட்டியில்,டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனதுமுதல் வெற்றியை பதிவு செய்தது.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் வேளையில், 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள், டெல்லியின் அருண் ஜெட்லீ ஸ்டேடியத்தில் மோதுகின்றன. டெல்லியில் மழை பெய்ததால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, கொல்கத்தா அணியில் முதலில், ஜேசன் ராய் மற்றும் லிட்டன் தாஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்த ஜேசன் 43 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கொல்கத்தா அணியின் வீரர்கள், டெல்லி அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க இயலாமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். முடிவில் ஆண்ட்ரே ரஸ்ஸல் கடைசி ஓவரில் சில சிக்ஸர்களை அடித்து அணி ஓரளவு நல்ல ஸ்கோரை எட்ட உதவினார்.
கொல்கத்தா:
கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்துள்ளது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 43 ரன்களும், ஆண்ட்ரே ரஸ்ஸல் 38 ரன்களும் குவித்துள்ளனர். டெல்லி அணியில் சாந்த் சர்மா, அன்ரிச் நார்ட்ஜே, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
டெல்லி:
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் ஆடியது.டெல்லி கேப்டன் வார்னர் அதிரடியாக விளையாடி 57 ரன்களை எடுத்தார்.அதன் பின்பு வந்த அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.மணீஷ் பாண்டே 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இறுதியில் அக்சர் படேல் நிதானமாக விளையாடி 19 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.அவருடன் லலித் யாதவ் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இறுதியில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.