டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் அடுத்த பெரிய நட்சத்திரமாக பார்க்கப்படும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கருடன் வைபவை ஒப்பிட வேண்டாம் என்றும், அவருக்கு போதுமான நேரமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, இந்திய ஆண்கள் அணிக்கான அழைப்பைப் பெற்ற இளம் வயது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு இந்த சாதனை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பெயரில் இருந்தது.
இந்த சாதனையைத் தொடர்ந்து, பலரும் வைபவ் சூர்யவன்ஷியை சச்சினுடன் ஒப்பிட்டு பேசத் தொடங்கியுள்ளனர். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் "சச்சின் மற்றும் வைபவை ஒப்பிட வேண்டாம். சச்சின் கிரிக்கெட்டின் கடவுள். வைபவ் சூர்யவன்ஷி கடவுளின் மகன் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் சச்சினுக்கு அருகில் கூட யாரும் வர முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், வைபவின் திறமையை ஸ்ரீகாந்த் வெகுவாக பாராட்டியுள்ளார். "அவருக்கு அபாரமான ஷாட் அடிக்கும் திறன், சிறந்த கணிப்பு திறன் மற்றும் அதிவேக எதிர்வினை திறன் இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு அவர் மிகப்பெரிய சொத்தாக இருப்பார்" என்று கூறினார்.
மேலும், இளம் வயதிலேயே தேசிய அணியில் வாய்ப்பு கிடைத்திருப்பதால் அவரை அவசரப்படுத்தக் கூடாது என்றும் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார். "அவருக்கு நீண்ட கால வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அவர் தனி ஆளாக போட்டிகளை வெல்லும் திறன் கொண்டவர். எனவே அவரை மெதுவாக வளர்த்து, சரியான முறையில் வழிநடத்த வேண்டும்" என்றார்.
இங்கிலாந்து தொடரில் உடனடியாக விளையாட வைப்பதற்குப் பதிலாக, சர்வதேச கிரிக்கெட் சூழலை புரிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். "அவர் அணியுடன் பயணம் செய்யட்டும். சர்வதேச கிரிக்கெட் எப்படி இருக்கும் என்பதை கற்றுக்கொள்ளட்டும். சரியான நேரத்தில் வாய்ப்பு கிடைக்கும் போது தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தட்டும்" என்று ஸ்ரீகாந்த் கூறினார்.
15 வயதிலேயே இந்திய அணியின் கதவை தட்டியுள்ள வைபவ் சூர்யவன்ஷி மீது ஏற்கனவே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், முன்னாள் வீரர்கள் அவரை பொறுமையாக கையாள வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
