சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) சட்டமன்ற உறுப்பினர் ஒருவரிடம் பேரம் பேசியதாகத் தொடரப்பட்ட சர்ச்சைக்குரிய வழக்கில், முன்னாள் அமைச்சரும் திமுக பிரமுகருமான செந்தில்பாலாஜி சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி வழக்கமான கையெழுத்திடும் பணியை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்த அவர், தற்போதைய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செந்தில்பாலாஜி கூறியதாவது "மக்களின் அடிப்படைத் தேவைகள், கோரிக்கைகள் மற்றும் குறைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டிய ஆக்கப்பூர்வமான அரசு, என் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடுவதிலேயே முழு முனைப்பு காட்டி வருகிறது" என்று குற்றம் சாட்டினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் "சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான புகாரிலும் சரி, எஃப்.ஐ.ஆரிலும் சரி, எனது பெயரே இடம்பெறவில்லை. இருப்பினும், என்னுடைய பெயர் இதில் சேர்க்கப்பட்டு, அதன் பொருட்டு நான் முன்ஜாமீன் பெற்று காவல் நிலையத்தில் தொடர்ந்து காலை மற்றும் மாலையில் கையெழுத்திட்டு வருகிறேன்.
இந்தச் சூழலில், லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) கூடுதல் வழக்குப் பதிவு செய்து, நான் தங்கியிருந்த அறை மற்றும் பல்வேறு இடங்களில் சோதனைகளை நடத்தி இந்த வழக்கைப் பதிவு செய்தது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாங்கள் கோரிய முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
இதுகுறித்து எங்களது மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டி இருப்பதால், காவல் நிலைய கையெழுத்திடும் கடமையிலிருந்து குறிப்பிட்ட நாட்கள் விலக்கு அளிக்கக் கோரி விசாரணை அதிகாரியிடம் கடிதம் அளித்திருந்தோம். அதே கோரிக்கை உயர்நீதிமன்றத்திலும் நேற்று தாக்கல் செய்யப்பட்டு 5 தினங்கள் விலக்கு கோரப்பட்டது.
இந்நிலையில், நேற்று உச்சநீதிமன்றம் இதுகுறித்து உரிய உத்தரவுகளை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில், இன்று காவல்துறையில் ஆஜராகி கையெழுத்திட்டு, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முறையாகப் பதிலளித்து விசாரணையினை எதிர்கொண்டு வருகிறேன்" எனவும் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் " இது ஒரு ஆக்கப்பூர்வமான அரசாக இருந்தால் மக்களின் தேவைகளை நிறைவேற்றும்; மாறாக என் மீது தொடர்ந்து வழக்குகள் போடுவதிலேயே கவனம் செலுத்துகிறது. என்னைத் தவிர வேறு யார் யார் மீது என்ன மாதிரியான வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன என்பதை நீங்களே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீதிமன்றமும், வழக்கறிஞர்களும் இருக்கிறார்கள். சட்டப்படி எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் சரி, அத்தனை வழக்குகளையும் நீதிமன்றத்தில் முறையாக எதிர்கொண்டு, இவை அனைத்தும் பொய் வழக்குகள் என்பதை நாங்கள் உறுதியாக நிரூபிப்போம்" என்று செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
