பார்டர்-கவாஸ்கர் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டிக்குள் நுழைய, இந்திய அணிக்கு மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.
ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக சொந்தநாடு திரும்பியுள்ள நிலையில், தற்போது வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியுள்ளார், அவர் மருத்துவ சோதனைக்கு செல்வதற்கு நாடு திரும்புகிறார் என்று ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். மேலும் கேமரூன் கிரீன் முழு உடற் தகுதியுடன் இருப்பதால் அவர் மூன்றாவது போட்டியில் களமிறங்குவார் என்று மெக்டொனால்ட் கூறினார், மிட்சேல் ஸ்டார்க் விளையாட தயாராக இருக்கிறார் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 3-வது போட்டி மார்ச்-1இல் இந்தூரிலும், கடைசி மற்றும் 4-வது போட்டி மார்ச் 9இல் அகமதாபாத்திலும் நடைபெறுகிறது.