என்னை பாராட்டும் பலரும் சில நாட்கள் முன்பு திட்டி வந்தனர் என ஆட்டநாயகன் விருது வென்றபின் ஹாரி ப்ரூக் பேச்சு.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில், ஹைதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் ஹைதராபாத் அணியின் இளம் வீரரான ஹாரி ப்ரூக் அதிரடியான தனது முதல் சதத்தை அடித்தார்.
ரூ.13.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட ஹாரி ப்ரூக், கடந்த 3 போட்டிகளில் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்திய நிலையில் விமர்சனத்துக்கு உள்ளானார். இந்த சமயத்தில் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் முதல் சதத்தை விளாசி விமர்சகர்களின் வாயை அடைத்துள்ளார் ஹாரி ப்ரூக். கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஹாரி ப்ரூக்க்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றபின் பேசிய ஹாரி ப்ரூக், சமூக வலைத்தளங்களில் என்னை விமர்சித்து வந்தனர். இன்று என்னை பாராட்டும் பலரும் சில நாட்கள் முன்பு திட்டி வந்தனர். நல்ல வேளை நான் எனது ஆட்டத்தின் மூலம் அவர்களின் வாயை அடைந்துள்ளேன் என்றார். மேலும், இப்போட்டியில் காதலி முன்பு சதம் விளாசியது குறித்தும் ஹாரி ப்ரூக் மனம் திறந்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், என்னுடைய காதலி இங்கே இருக்கிறார், ஆனால், என் குடும்பத்தினர் அனைவரும் ஓய்வுக்காக வெளியேறிவிட்டனர். அவர்கள் அனைவரும் எனது சதத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என நம்புகிறேன் எனவும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.