ராஜஸ்தான் :ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் எதிர்காலம் குறித்து பெரும் யூகங்கள் எழுந்துள்ளன. பல செய்திகள் சாம்சன் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள இருந்ததாகவும், அது தோல்வியடைந்ததாகவும் கூறின. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் டிரேட் டீல் மூலம் செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் பேசப்படுகிறது.
இந்நிலையில் சாம்சன் வெளியேறினால் அணியை யார் வழிநடத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த விஷயம் குறித்து முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப், இளம் ஓப்பனர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியின் கேப்டனாக வர வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளார். ரியான் பராக் என்ற இளம் வீரரும் கேப்டன்ஷிப் ரேஸில் இருப்பதாகக் கூறிய கைஃப், ஜெய்ஸ்வாலுக்கு சர்வதேச அனுபவம் இருப்பதால் அவரே முன்னிலை பெறுவார் என்று தெரிவித்தார்.
தனது யூடியூப் சேனலில் பேசிய கைஃப், ஜெய்ஸ்வாலின் பேட்டிங் திறமையைப் புகழ்ந்தார்.”ரியான் பராக் சில ஆண்டுகளாக ஆடி வருகிறார், ஆனால் ஜெய்ஸ்வாலுக்கு சர்வதேச அனுபவம் உள்ளது. அதை புறக்கணிக்க முடியாது. என் கருத்துப்படி ஜெய்ஸ்வாலே கேப்டனாக வேண்டும். உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் ரன் குவிக்கிறார்” என்று கைஃப் கூறினார். ஜெய்ஸ்வால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக தொடர்ச்சியாக ஆட முடியாதது துரதிஷ்டம் என்றும், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, சுப்மன் கில் போன்றோர் இருப்பதால் காத்திருக்க வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐபிஎல் 2026 ஏலத்துக்கு முன்னர் அணிகள் வீரர்களை ரிட்டெய்ன் செய்யும் காலக்கெடு நவம்பர் 15 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் டிசம்பர் நடுப்பகுதியில் இந்தியாவுக்கு வெளியே நடக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. துபாய் அல்லது ஜெட்டா போன்ற இடங்கள் ஏலத்திற்கான இடமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சஞ்சு சாம்சன் வெளியேறினால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன்ஷிப் இளம் வீரர்களிடம் செல்லும் என்ற யூகங்கள் தீவிரமடைந்துள்ளன. யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் திறமைசாலிகள் கேப்டனாக வந்தால் அணி புதிய உத்வேகம் பெறும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
