IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதற்றத்தை பிசிசிஐ கண்காணித்து வருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளன.

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் காஷ்மீரில் இருந்த 9 பயங்கரவாத மறைவிடங்களை அழித்தது. இந்த தாக்குதலில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 15 நாட்களுக்குப் பிறகு இந்தியாவின் இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் பதிலடி நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், இது ஐபிஎல் தொடரை பாதிக்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அட்டவணையின் படி, ஐபிஎல் தொடர் நடக்கும் என பிசிசிஐ விளக்கமளித்துள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், வாரியம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
ஆனால், எல்லை மாநிலமான பஞ்சாப்பில் இனி நடக்கவிருக்கும் போட்டிகள் டெல்லிக்கு மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, நாளை மே 8 ஆம் தேதி நடைபெற உள்ள டெல்லி கேபிடல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் எந்த பாதிப்பும் இருக்காது. ஆபரேஷன் சிந்தூர் செயல்படுத்தப்படுவதற்கு முன்பே டெல்லி அணி தர்மசாலாவை அடைந்துவிட்டது.
தர்மசாலா விமான நிலையம் தற்போது மூடப்பட்டிருப்பதால், போட்டி முடிந்ததும், டெல்லி அணி தர்மசாலாவிலிருந்து சாலை வழியாகத் திரும்பும். ஆனால், மே 11 ஆம் தேதி திட்டமிடப்பட்ட மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் போட்டியை தர்மசாலாவிலிருந்து மும்பையில் உள்ள வான்கடே மைதானத்திற்கு மாற்றுவது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. என்ன நடக்க போகிறது என்று பொருத்திருந்து பார்ப்போம்.