சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!
இந்தப் பயிற்சி குறித்து பொதுமக்களிடையே எந்த பீதியோ அல்லது அச்சமோ தேவையில்லை என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம், மெட்ராஸ் அணுமின் நிலையம் மற்றும் சென்னை துறைமுக அறக்கட்டளையில் இன்று மாலை 4 மணிக்கு இந்த சிவில் பாதுகாப்பு பயிற்சியை நடத்தியது. போர்க் காலத்தின்போது அணுமின் நிலையம் தாக்கப்படும் சூழலில் நிலைமையைச் சமாளிப்பது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது.
இதில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேரிடர் மேலாண்மை ஆணைய வீரர்களும் பங்கேற்றனர். சுமார், 50க்கும் மேற்பட்ட வீரர்கள் போர் பாதுகாப்பு பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். சென்னை துறைமுகம், செங்கல்பட்டு – கல்பாக்கத்தில் போர் ஒத்திகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த போர் பாதுகாப்பு ஒத்திகைக்காக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரிகளில் விரைந்த பீரங்கிகள் நேற்றைய தினம் கொண்டு வரப்பட்டது. மேற்கண்ட சிவில் பாதுகாப்புப் பயிற்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய நிறுவல்களில் தயார்நிலையைச் சரிபார்க்கும் ஒரு போலிப் பயிற்சி மட்டுமே. மற்ற இடங்களில் உள்ள மற்ற அனைத்து செயல்பாடுகளும் வழக்கம் போல் நடைபெறும்.
போர்க்கால ஒத்திகைகள் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இது போர் தயார் நிலையை சரிபார்ப்பதற்கான பாதுகாப்பு பயிற்சி மட்டுமே ஆகும். இந்தப் பயிற்சி குறித்து பொதுமக்களிடையே எந்த பீதியோ அல்லது அச்சமோ தேவையில்லை என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.