ஐபிஎல் தொடரின் இன்றைய RCB-KKR போட்டியில் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
16-வது ஐபிஎல் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் குர்பாஸ்(57 ரன்கள்), ஷர்துல் தாக்குர்(68 ரன்கள்) மற்றும் ரிங்கு சிங்(46 ரன்கள்) ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழந்து 204 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி சார்பில் டேவிட் வில்லி 2 விக்கெட்களும், கரண் சர்மா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
205 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி(21 ரன்கள்) மற்றும் டூபிளெஸ்ஸி(23 ரன்கள்) என நிலைத்து நிற்காமல் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்பின் களமிறங்கிய பிரேஸ்வெல் 19 ரன்னிலும், மேக்ஸ்வெல் 5 ரன்னிலும் ஆட்டமிழக்க போட்டி கொல்கத்தா பக்கம் சரிந்தது.
முடிவில் பெங்களூரு அணி 123 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்களும், சுயஷ் சர்மா 3 விக்கெட்களும், மற்றும் சுனில் நரைன் 2 விக்கெட்களும் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர். இதனால் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.