#IPL BREAKING: பரபரப்பான ஆட்டம்..! ஹைதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி..!

ஐபிஎல் தொடரின் இன்றைய RR vs SRH போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள், ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் விளையாடின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் இருவரும் அதிரடி பேட்டிங் செய்தனர். ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்க, ஜோஸ் பட்லர் மற்றும் சாம்சன் அதிரடியாக விளையாடி பவுண்டரிகள், சிக்ஸர்கள் என பறக்கவிட்டு அரைசதம் விளாசினர். முடிவில், ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கில் ஹைதராபாத் அணியில் முதலில் அன்மோல்பிரீத் சிங் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கி நல்லத் தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். ஒரு புறம் அன்மோல்பிரீத் ஆட்டமிழக்க, மறுபுறம் அபிஷேக் அதிரடியாக விளையாடி 55 ரன்களை கடந்து தனது விக்கெட்டை இழந்தார். இதன்பின், ராகுல் திரிபாதி மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஜோடி களமிறங்கி ரன்களை குவித்தனர்.
இவர்கள் இருவரும் ஆட்டமிழக்க, பிலிப்ஸ் களமிறங்கி அதிரடிக்காட்டி 6 பந்துகளில் 25 ரன்கள் அடித்து களத்தை விட்டு வெளியேறினார். இறுதியாக அப்துல் சமத் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக, அபிஷேக் சர்மா 55 ரன்களும், ராகுல் திரிபாதி 47 ரன்களும், அன்மோல்பிரீத் 33 ரன்களும், ஹென்ரிச் கிளாசென் 26 ரன்களும், பிலிப்ஸ் 25 ரன்களும் குவித்துள்ளனர். ராஜஸ்தான் அணியில் யுஸ்வேந்திர சாஹல் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.