ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் மாற்றம்.! ஃபைனல் எங்கு தெரியுமா.?
ஐபிஎல் 2025 தகுதிச் சுற்று மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான புதிய இடங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி முதலில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் 2025 இறுதிப் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இன்று அறிவித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி கொல்கத்தாவில் இருந்து அகமதாபாத் மைதானத்திற்கு மாற்றம் செய்துள்ளதாக பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, Qualifier 1, Eliminator போட்டிகள் பஞ்சாப்பின் முல்லன்பூர் மைத்தனத்திலும், Qualifier 2 அகமதாபாத் மைதானத்திலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டி உட்பட இரண்டு பிளேஆஃப் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஈடன் கார்டன்ஸில் ஏற்பட்ட மோசமான வானிலையை மனதில் கொண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த முடிவை எடுத்தது. ஐபிஎல் 2025 பிளேஆஃப்களுக்கு ஏற்கனவே மூன்று அணிகள் தகுதி பெற்றுள்ளன.
அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தகுதிச் சுற்றில் போட்டியிடும். மேலும், டெல்லி கேபிடல்ஸ் அல்லது மும்பை இந்தியன்ஸ் அணிகளில் இருந்து ஒரு அணியும் பிளேஆஃப்களுக்குள் நுழையும்.
முதல் தகுதிச் சுற்று மே 29 அன்று நடைபெறும், இதில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பங்கேற்கும். இதைத் தொடர்ந்து எலிமினேட்டர் நடைபெறும், அங்கு மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடிக்கும் அணிகள் போட்டியிடும்.
இரண்டாவது தகுதிச் சுற்று ஜூன் 1 ஆம் தேதி நடைபெறும், இதில் முதல் தகுதிச் சுற்றில் தோல்வியடைந்த அணியும் எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணியும் இறுதிப் போட்டிக்கான இடத்திற்காக மோதும். இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும்.