கார்த்திக் சர்மா போன்ற இளம் வீரர்களுக்கு சிக்கலா? ஜாகீர் கான் ஒப்பந்தத்தை விமர்சித்த அஸ்வின்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் ஒரு வருட ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.

Hero Image

"சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜாகீர் கானுக்கு வெறும் ஓராண்டு மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது இளம் வீரர்களின் எதிர்காலத்தைப் பெரிதும் பாதிக்கும்; இந்த குறுகிய கால ஒப்பந்தத்தால் கார்த்திக் சர்மா போன்ற திறமையான வீரர்கள் அணியில் இருந்து அதிரடியாகத் தூக்கி எறியப்படும் அபாயம் உள்ளது" என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் மிகவும் ஓப்பனாகவும் காரசாரமாகவும் விமர்சித்துள்ளார்.

கடந்த 2026 ஐபிஎல் (IPL 2026) தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடைந்த படுதோல்வி மற்றும் மோசமான செயல்பாடுகள் காரணமாக, கடந்த 18 ஆண்டுகளாக அணியின் தூணாக விளங்கிய தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் சிஎஸ்கே நிர்வாகத்தால் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை (Zaheer Khan) அடுத்த தலைமைப் பயிற்சியாளராக சிஎஸ்கே நிர்வாகம் முறைப்படி தேர்வு செய்துள்ளது.

இருப்பினும், 2027 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு (Mega Auction) முன்பு வரவிருக்கும் இந்த ஒரு வருடக் காலத்திற்கு மட்டுமே அவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரங்களில் ஒரு புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், அஸ்வின் இதற்குப் பின்னால் இருக்கும் ஆபத்துகளைப் பட்டியலிட்டுள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் சிஎஸ்கே அணியின் இந்த புதிய பயிற்சியாளர் நியமனம் குறித்துப் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், ஓராண்டு ஒப்பந்தத்தின் கீழ் ஒரு பயிற்சியாளரால் எப்படிச் சுதந்திரமாகச் செயல்பட முடியும் என்கிற பலத்த கேள்வியை எழுப்பினார். "சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சிவம் துபே போன்ற முக்கிய வீரர்கள், ஜாகீர் கான் வெறும் ஓராண்டு ஒப்பந்தத்தில் தான் வந்துள்ளார் என்ற செய்தியைக் கேட்கும்போது, அவரிடம் சென்று எப்படித் தங்களது கடந்த கால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கான அணியின் எதிர்காலத் திட்டங்களை வகுக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

ஒரு பயிற்சியாளருக்குத் தனக்கு இன்னும் மூன்று நான்கு ஆண்டுகள் பதவி இருக்கிறது என்பது தெரிந்தால் மட்டும்தான், அவர் அணியில் இருக்கும் கார்த்திக் சர்மா போன்ற ஒரு இளம் வீரர் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் சொதப்பித் தோல்வியடைந்தாலும், அவருக்குப் போதிய கால அவகாசம் கொடுத்து, அவரது திறமைகளை மெருகேற்றி அவரை ஒரு சர்வதேச அளவிலான சாம்பியன் கிரிக்கெட்டராக உருவாக்க முடியும் என்றார். ஆனால், தனக்கு இருப்பது ஒரே ஒரு வருடம்தான், அதற்குள் உடனடியாக வெற்றிகளைத் தேடித்தர வேண்டும் என்கிற உச்சக்கட்ட நெருக்கடி ஜாகீர் கானுக்கு இருக்கும்போது, கார்த்திக் சர்மா தொடர்ந்து சொதப்பினால் உடனடியாக அவரை அணியை விட்டுத் தூக்கி எறிந்துவிட்டு மாற்று வீரர்களைத் தேடத்தான் அவர் முற்படுவார் என்று அஸ்வின் விவரித்தார்.

சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் ஜாகீர் கானுக்கும் இடையே உள்வட்டாரங்களில் என்னென்ன ஆலோசனைகள் மற்றும் விவாதங்கள் நடந்துள்ளன என்பது தற்போதைக்கு யாருக்கும் முழுமையாகத் தெரியாது என்றார். ஒருவேளை, வரவிருக்கும் 2027 ஐபிஎல் தொடரில் ஜாகீர் கானின் பயிற்சியின் கீழ் சென்னை அணி சிறப்பாகச் செயல்பட்டுப் புதிய சாதனைகளைப் படைக்கும் பட்சத்தில், மெகா ஏலத்திற்குப் பிறகு அவருடன் ஒரு புத்தம் புதிய நீண்ட கால ஒப்பந்தத்தை மேற்கொள்ளச் சென்னை நிர்வாகம் ரகசியமாகத் திட்டமிட்டிருக்கலாம் என்றும் அஸ்வின் தனது கிரிக்கெட் மேட்ச் அனாலிசிஸ் பேட்டியை நிறைவு செய்துள்ளார்.

கார்த்திக் சர்மா போன்ற இளம் வீரர்களுக்கு சிக்கலா? ஜாகீர் கான் ஒப்பந்தத்தை விமர்சித்த அஸ்வின்