டெல்லி :முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா எதிர்காலத்தில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடிப்பார் என்று தைரியமான கணிப்பு வெளியிட்டார். 2025 ஆசிய கோப்பையில் அபிஷேக் 206.66 என்ற அபார ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருவதைப் பாராட்டிய கைஃப், இவரது ஆட்ட மனப்பான்மை (இன்டென்ட்) பவுலர்களின் வாழ்க்கையை பவர் பிளேயில் (முதல் ஆறு ஓவர்கள்) அழிக்கும் திறன் கொண்டது என்று கூறினார்.
தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில் கைஃப் கூறியதாவது “இது வெறும் பேட்டிங் இல்லை, இது அபிஷேக் ஷர்மாவின் ஆட்ட மனப்பான்மை. அவர் சிறப்பாக விளையாடும் நாளில், பவர் பிளேயில் ஒரு பவுலரின் கேரியரையே முடித்து விடுவார். அவர் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்களும் அடிக்க முடியும். இது எதிர்காலத்தில் நடக்கும். அவரது ஷாட்களின் வகை, மன தைரியம், ஆட்டத்தைப் புரிந்து கொள்ளும் திறன் ஆகியவை இதை உறுதி செய்யும்,” என்று உறுதியாகத் தெரிவித்தார்.
கைஃப், அபிஷேக் ஷர்மாவை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் வாரிசாக ஒப்பிட்டார். “ரோஹித் ஷர்மா இல்லாத நிலையில், பவர் பிளேயில் ஆக்ரோஷமாக ஆடுபவர் யார் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பதில் அபிஷேக் ஷர்மா. அவர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடும்போது, ஆட்ட நாயகன் விருது பெறுகிறார். அவர் ஆடும்போது, ஒருவரே ஆட்டத்தை வென்று விடுகிறார்,” என்று கைஃப் புகழ்ந்தார்.
25 வயதான அபிஷேக் ஷர்மா, T20I போட்டிகளில் 21 இன்னிங்ஸ்களில் 783 ரன்கள் குவித்து, 197.72 என்ற அபார ஸ்ட்ரைக் ரேட்டைப் பெற்றுள்ளார். இன்னும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகாத அவர், T20 வடிவத்தில் இந்தியாவுக்கு முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 தொடரில் அவர் முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அபிஷேக், ரோஹித் ஷர்மாவின் ஆக்ரோஷமான பாணியை பின்பற்றி, பவர் பிளேயில் பவுலர்களை திணறடிக்கும் திறனை வெளிப்படுத்தி வருகிறார். கைஃபின் இந்த கணிப்பு, அபிஷேக் மீதான நம்பிக்கையையும், அவரது எதிர்கால சாதனைகள் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
