டிஎன்பிஎல் தொடரின் இன்றைய MADURAI vs Trichy போட்டியில், மதுரை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் Ba11sy திருச்சி அணிகள் சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய திருச்சி அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக மணி பாரதி 48 ரன்கள் குவித்தார். இதனையடுத்து, 106 ரன்கள் இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது.
இதில் முதலில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சுரேஷ் லோகேஷ்வர் நல்லத் தொடக்கம் அமைத்துக்கொடுத்தார். அவருடன் களமிறங்கிய ஹரி நிஷாந்த் 11 ரன்களுடன் களத்தை விட்டு வெளியேறினார். இதன்பின் களமிறங்கிய ஜெகதீசன் கௌசிக் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பிறகு நிதானமாக விளையாடிய சுரேஷ் லோகேஷ்வர், ஈஸ்வரன் வீசிய பந்தில் ஆட்டமிழக்க, ஸ்வப்னில் சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கி இறுதிவரை நின்று அணியை வெற்றி இலக்கை எட்டச்செய்தனர். முடிவில் மதுரை அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது 108 ரன்கள் எடுத்தது.
இதனால் மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சுரேஷ் லோகேஷ்வர் 32 ரன்களும், ஸ்வப்னில் சிங் 25* ரன்களும் குவித்துள்ளனர். திருச்சி அணியில் ஈஸ்வரன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் சிறந்த வீரராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
