மும்பை போடும் அதிரடி ஸ்கெட்ச்...கேப்டனாக அவதாரம் எடுக்கும் திலக் வர்மா?

2026 சீசனில் 9-வது இடத்தைப் பிடித்து பிளேஆஃப் வாய்ப்பை இழந்ததுடன், ஹர்திக் 10 போட்டிகளில் 206 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார்.

Hero Image

சென்னை : ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியில் பெரிய மாற்றங்கள் நடைபெறலாம் என்ற தகவல் கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் செய்து, அதற்கு பதிலாக இளம் நட்சத்திர தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை அணியில் இணைக்க மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2024 முதல் 2026 வரை மூன்று சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்தி வந்தார். ஆனால் அவரது தலைமையில் அணி எதிர்பார்த்த வெற்றிகளைப் பெறவில்லை. 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் முடித்து பிளேஆஃப் சுற்றுக்கே தகுதி பெற முடியாமல் ஏமாற்றம் அளித்தது.

தனிப்பட்ட செயல்பாட்டிலும் ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. 10 போட்டிகளில் 206 ரன்கள் மட்டுமே எடுத்ததுடன், பந்துவீச்சில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். இதனால் அணியின் எதிர்கால திட்டங்களில் மாற்றம் தேவை என்ற கருத்து நிர்வாகத்தில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2026 சீசனில் 16 போட்டிகளில் 427 ரன்கள் குவித்து சிறப்பாக செயல்பட்டார். அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டுடன் தொடர்ந்து ரன்கள் சேர்த்த அவர், இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நீண்டகால தொடக்க வீரர் தேவைப்படுவதாலும், எதிர்கால கேப்டன் வாய்ப்புள்ள இந்திய வீரரை அணியில் இணைக்க விரும்புவதாலும் ஜெய்ஸ்வால் மீது கவனம் செலுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்தும் மும்பை நிர்வாகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. காயம் காரணமாக 2026 சீசனில் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாத ரோஹித், விளையாடிய 9 போட்டிகளில் 283 ரன்கள் எடுத்திருந்தாலும், 2027 சீசன் அவரின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

அதே நேரத்தில், எதிர்கால கேப்டனாக திலக் வர்மா உருவெடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அணியை மறுசீரமைக்கும் முயற்சியில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ஹர்திக் பாண்ட்யா – ஜெய்ஸ்வால் டிரேட் உண்மையாவதா என்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், இந்த தகவல்கள் அனைத்தும் தற்போது ஊகங்களாக மட்டுமே உள்ளன. மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அல்லது சம்பந்தப்பட்ட வீரர்கள் தரப்பில் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை போடும் அதிரடி ஸ்கெட்ச்...கேப்டனாக அவதாரம் எடுக்கும் திலக் வர்மா?