பயிர்க்கடன் தள்ளுபடி முதல் நீட் விலக்கு வரை.. சட்டப்பேரவையில் முதல்வர் விஜயின் உரை!

ல்-நினோ தாக்கத்தால் மழை குறையும் சூழலிலும் விவசாயிகளைக் காக்க அரசு உறுதுணையாக இருக்கும் என்றும், தவெக அரசுக்கு விவசாயிகள் ஆதரவு அளித்து வரும் நிலையில் சில இடங்களில் நடக்கும் போராட்டங்கள் எதிர்க்கட்சிகளின் தூண்டுதலே என்றும் குறிப்பிட்டார்.

Hero Image

சென்னை : ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், விவசாயிகள் நலன், மாநில உரிமைகள், இருமொழிக் கொள்கை, நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அரசின் நிலைப்பாட்டை விளக்கினார்.

விவசாயிகள் குறித்துப் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழக அரசை பெரும்பாலான விவசாயிகள் புரிந்துகொண்டு ஆதரித்து வருவதாகவும், சில இடங்களில் நடைபெறும் போராட்டங்கள் எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் நடைபெறுவதாகவும் கூறினார். இந்த ஆண்டு எல்-நினோ தாக்கம் காரணமாக மழை அளவு குறையும் சூழல் இருப்பதை விவசாயிகளும் உணர்ந்துள்ளதாக தெரிவித்த அவர், எந்த சூழலிலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்.

மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர விவசாயிகளுக்கு 100 சதவீத பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாகவும், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.35 ஆயிரம் நிதிப் பயன் கிடைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மொத்தம் 14 லட்சத்து 43 ஆயிரத்து 504 விவசாயிகளுக்கு ரூ.5,932.23 கோடி மதிப்பிலான பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஒன்றிய அரசுடனான உறவு குறித்து பேசிய முதல்வர் விஜய், “கூட்டுறவு கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பதே அரசின் கொள்கை என மீண்டும் வலியுறுத்தினார். ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு இருந்தாலும், தேவையில்லாத மோதல் போக்கை அரசு விரும்பவில்லை என்றும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அதேநேரம் மாநில உரிமைகள் மற்றும் அரசியல் கொள்கைகளில் எந்தவித சமரசமும் செய்யமாட்டோம் என்றும் உறுதிபட கூறினார்.

தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாகவும் அவர் விளக்கம் அளித்தார். அரசு விழாக்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவது தொடரும் என்றும், இதுகுறித்து ஒன்றிய அரசிடம் தமிழகத்தின் நிலைப்பாடு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

நீட் தேர்வு குறித்து பேசிய அவர், கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு சமமான வாய்ப்பை வழங்கவில்லை என்றார். மருத்துவக் கல்வியில் சமூக நீதி மற்றும் சம வாய்ப்பை பாதிக்கும் இந்த முறைக்கு மாற்றாக, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இருமொழிக் கொள்கை தொடர்பாக பேசிய அவர், பேரறிஞர் அண்ணா நடைமுறைப்படுத்திய இருமொழிக் கொள்கையை தமிழக வெற்றிக் கழக அரசு முழுமையாக ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். தமிழ் ஆட்சி மொழியாகவும், ஆங்கிலம் உலகளாவிய வாய்ப்புகளுக்கான மொழியாகவும் தொடரும் என்றும், எந்த மொழியையும் கட்டாயமாக திணிப்பதை தமிழக அரசு ஒருபோதும் ஏற்காது என்றும் கூறினார்.

கடந்த ஜூன் 11-ஆம் தேதி நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் முதல்வர் விஜய் தெரிவித்தார். வறுமையற்ற தமிழ்நாடு திட்டத்திற்கான நிதி, இரண்டு புதிய AIIMS மருத்துவமனைகள், மருத்துவ சேர்க்கையில் பிளஸ்-2 மதிப்பெண் முறை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி மையங்கள், இளைஞர் திறன் மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம், மீனவர்களின் வாழ்வாதார பாதுகாப்பு, தேசிய விண்வெளி உற்பத்தி மையம், சாலை மற்றும் ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாடு, அனைத்து கிராமங்களுக்கும் டிஜிட்டல் இணைப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

முதல்வர் விஜயின் இந்த பதிலுரை, ஆளுநர் உரை விவாதத்தில் எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதோடு, எதிர்கால வளர்ச்சி திட்டங்களுக்கான அரசின் நோக்கத்தையும் எடுத்துரைத்தது.