அயர்லாந்து : அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்து ஒயிட்வாஷ் (Whitewash) ஆனதைத் தொடர்ந்து, இந்திய அணியின் பேட்டிங் வரிசை பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், ஜூலை 1 முதல் தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்திலேயே 15 வயதான இளம் பேட்டிங் அற்புதம் வைபவ் சூர்யவன்ஷியை பிளேயிங் லெவனில் பிளெய்ங் சேர்க்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மிக வலுவாக வலியுறுத்தியுள்ளார்.
அயர்லாந்து தொடரில் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கிலும், கேப்டன்சியிலும் முற்றிலும் சொதப்பினார். அவர் இரண்டு போட்டிகளில் சேர்த்து வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல, இஷான் கிஷனும் 13 ரன்களில் சுருண்டார். தொடக்க வீரர் சஞ்சு சாம்சன், ஆல்-ரவுண்டர்கள் சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் என அனைவரும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடவில்லை.
இதுகுறித்து ஆஜ் தக் (Aaj Tak) ஊடகத்தில் பேசிய கவாஸ்கர், "கடந்த ஒரு மாதமாகவே நான் இதைச் சொல்லி வருகிறேன். சூர்யவன்ஷி இருந்த ஃபார்மிற்கு அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளிலுமே அவர் விளையாடி இருக்க வேண்டும். இளம் வீரர்களைச் சோதித்துப் பார்க்க அயர்லாந்து தொடர்தான் மிகச் சிறந்த வாய்ப்பாக இருந்தது; ஆனால் அணி நிர்வாகம் அவரைப் பெஞ்சில் உட்கார வைத்து தவறு செய்துவிட்டது.
இனி எந்த சாக்குகளையும் சொல்ல முடியாது, இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே சூர்யவன்ஷி களம் இறங்க வேண்டும்" என்று கறாராகக் கூறியுள்ளார். அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோரை உடனே நீக்குவது நியாயமில்லை என்பதால், ஃபார்மில் இல்லாத ஒரு மிடில் ஆர்டர் பேட்டரை தூக்கிவிட்டு, வைபவ் சூர்யவன்ஷியை 3-வது இடத்தில் ஆட வைக்கலாம் என்றும், அவர் கிளிக் ஆகிவிட்டால் இங்கிலாந்து பௌலர்களுக்கு அது மிகப்பெரிய அழுத்தமாக மாறும் என்றும் கவாஸ்கர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
