SA-20 லீக் தொடரின் இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேபிடல்ஸை தோற்கடித்து, சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் போன்று, தென் ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு தொடங்கப்பட்ட 6 அணிகள் பங்குபெற்ற டி-20 லீக் தொடரான அறிமுக SA20 20 ஓவர் லீக்கின் இறுதிப்போட்டியில் நேற்று எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி மற்றும் வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற மார்க்ரம் முதலில் பவுலிங் செய்யப்போவதாக அறிவித்தார். இதன்படி முதலில் களமிறங்கிய பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி, ஈஸ்டர்ன் கேப் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அனைத்து விக்கெட்களையும் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் வான் டர் மெர்வே 4 விக்கெட்கள் எடுத்து அசத்தினார்.
136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஈஸ்டர்ன் கேப் அணியில் தொடக்க வீரரான ஆடம் ரோசிங்டன்(57 ரன்கள்), கேப்டன் மார்க்ரம்(26 ரன்கள்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் 16.2 ஓவர்களில் 137/6 ரன்கள் வெற்றி இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்று SA20 20 ஓவர் லீக்கின் முதல் சாம்பியன் பட்டம் வென்றது.
சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்திய வான் டர் மெர்வே ஆட்டநாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதை எய்டன் மார்க்ரம் பெற்றனர். மேலும் இந்த தொடரின் சிறந்த பேட்ஸ்மனாக பார்ல் ராயல்ஸ் அணியின் ஜாஸ் பட்லரும், சிறந்த பவுலராக வான் டர் மெர்வேவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.