லக்னோ அணிக்கு அதிர்ச்சி…ஐபிஎல் போட்டிகளை மிஸ் பண்ணப்போகும் மயங்க் யாதவ்! இது தான் காரணமா?
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட முடியாமல் போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் பந்துவீச்சு தூணாக இருந்த ஒரு வீரர் என்றால் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் தான். ஏனென்றால், 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி அனைவருடைய கவனத்தையும் தனது பக்கம் திருப்பி இருந்தார். அது மட்டுமின்றி, 7 விக்கெட்கள் வீழ்த்தியும் அசத்தி இருந்தார்.விலா எலும்பிற்கும் இடுப்புக்கும் இடையில், கீழ் முதுகில் ஏற்பட்ட வலி காரணமாக முழுவதுமாக அவரால் ஐபிஎல் போட்டி விளையாட முடியவில்லை.
மொத்தமாக 4 போட்டிகள் மட்டுமே விளையாடி 7 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அவர் விளையாடியது குறைவான போட்டிகளாக இருந்தாலும் கூட அவருடைய பந்துவீச்சின் தாக்கம் பெரிய அளவில் பேசப்பட்டது. எனவே, அவர் மீது மீண்டும் நம்பிக்கை வைத்து லக்னோ அணி 11 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரை தொடர்ந்து காயத்தில் இருந்து மீண்டு வந்த மயங்க் யாதவ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடியபோது அவருக்கு மீண்டும் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது.
அந்த காயத்தில் இருந்து அவர் எப்போது மீண்டு வருவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். இந்த சூழலில் அவருடைய திருப்பம் மற்றும் அவருடைய காயம் பற்றிய தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதன்படி, முதுகில் அவருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவர் திரும்ப 1 மாதங்கள் ஆகலாம் எனவும், இதன் காரணமாக இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் முதல் பாதி விளையாட வாய்ப்புகள் மிகவும் குறைவு எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவருடைய உடற்தகுதி குறித்து லக்னோ அணியில் இயக்குநராக நியமிக்கப்பட்டு இருக்கும் ஜாகீர் கான் பேசியிருக்கிறார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது ” லக்னோ அணிக்கு மயங்க் யாதவ் திரும்புவது எவ்வளவு முக்கியமோ அவருடைய உடற்தகுதி 100% இருக்கவேண்டும் என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமான விஷயம். அவரை கொண்டுவருவதற்கான முயற்சிகளை அனைத்தும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்” எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய கேப்டன் ரிஷப் பந்த் தலைமையில், லக்னோ அணி வரும் மார்ச் 24- ஆம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. ஒரு சில போட்டிகளில் மயங்க் யாதவ் விளையாடவில்லை என்றால் கூட மற்ற வீரர்கள் லக்னோ அணியின் பந்துவீச்சில் தூணாக இருப்பார்கள். ஆனால், மயங்க் யாதவ் முதல் பாதியிலே (7 போட்டிகள்) விளையாடவில்லை என்றால் நிச்சயமாக லக்னோ அணிக்கு அது ஒரு பின்னடைவாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.