திருடு போன டெல்லி அணி வீரர்களின் விளையாட்டு உபகரணங்கள்! அதிர்ச்சியில் அணி நிர்வாகம்!

டெல்லி அணி வீரர்களின் விளையாட்டு கிட் பைகளில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள திருட்டு.

டெல்லி அணி வீரர்களின் விளையாட்டு கிட் பைகளில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள திருட்டு.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 16-ஆவது சீசனில் இதுவரை லீக் போட்டியில் தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்த ஒரே அணி டெல்லி கேபிடல்ஸ் மட்டுமே. நாளை புதுதில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இன்னும் ஒரு மோசமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.

கடந்த சனிக்கிழமை பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தபின், டெல்லி அணிக்கு ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அதாவது,  டெல்லி அணி வீரர்களின் விளையாட்டு கிட் பைகளில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பேட்டுகள் மற்றும் பிற உபகரணங்கள் காணாமல் போனது.

டெல்லி அணியில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், யாஷ் துல் மற்றும் பிலிப் சால்ட் உள்ளிட்ட சிலரின் 16 பேட்டுகள், கிளவுஸ், ஷூ உள்ளிட்டவை கிரிக்கெட் பேக்கில் இருந்து மாயமானது. கடந்த ஞாயிறு அன்று பெங்களூருக்கு எதிரான போட்டிக்குப் பிறகு பெங்களூருவிலிருந்து தலைநகர் டெல்லிக்கு வந்தவுடன் வீரர்களின் உடமைகள் அவர்களுக்கு கிடைத்தபோது பொருட்கள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில், கேப்டன் டேவிட் வார்னரின் மூன்று பேட்டுகளும், ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷின் இரண்டு பேட்டுகளும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் பிலிப் சால்ட்டின் மூன்று பேட்டுகளும், இளம் வீரர் யாஷ் துலின் ஐந்து பேட்டுகளும் அடங்கும். இன்னும் சில வீரர்களின் பேக்கில் உள்ள காலணிகள், கையுறைகள் மற்றும் பிற கிரிக்கெட் உபகரணங்களை இழந்துள்ளனர். வெளிநாட்டு வீரர்களின் பேட்டுகள் ஒவ்வொன்றும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.

பெங்களூருவில் இருந்து திரும்பியதும், வீரர்கள் தங்களுக்குரிய கிட்களைப் பெற்ற பின், பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்ததும் அணி உரிமையாளரிடம் புகார் அளித்தனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.  இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை. இந்த விவகாரம் தளவாடத் துறைக்கும், காவல்துறைக்கும், பின்னர் விமான நிலையத்துக்கும் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருவதாக டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த திருட்டு சம்பவத்தை தொடர்ந்து, ஏப்ரல் 20 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக வீரர்கள் புதிய பேட்களுக்காக தங்கள் முகவர்களைத் தொடர்பு கொண்டுள்ளனர் எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.