டெல்லி :ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026-இல் பாகிஸ்தானின் பங்கேற்பு சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளது. பங்களாதேஷ் அணியை திரும்பப் பெற்ற ஐசிசி முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, இறுதி முடிவு அரசின் கையில் இருப்பதாகவும், வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த வார தொடக்கத்தில் தெளிவு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
ஆனால் இந்த புறக்கணிப்பு அச்சுறுத்தல் பாகிஸ்தானுக்கு வெளியே பெரும் சந்தேகத்தையும் கேலியையும் ஏற்படுத்தியுள்ளது.முன்னாள் இந்திய கேப்டன் அஜிங்க்யா ரஹானே இந்த புறக்கணிப்பு அச்சுறுத்தலை கடுமையாக கேலி செய்துள்ளார். கிரிக்பஸ் நிகழ்ச்சியில் பேசிய ரஹானே, “அவர்களால் அது செய்ய முடியாது… அதற்கு தைரியம் இருக்கிறதா? (guts இருக்கிறதா?) இல்லை. அவர்கள் வரத்தான் போகிறார்கள்” என்று நேரடியாகவும் கடுமையாகவும் கூறினார்.
பாகிஸ்தான் அணி புறக்கணிப்பதற்கு எந்த தைரியமும் இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.பின்னணியில் பங்களாதேஷ் அணியை ஐசிசி நீக்கியது தான் இந்த சர்ச்சைக்கு காரணம். இந்தியாவில் தனது போட்டிகளை விளையாட மறுத்து இலங்கைக்கு மாற்றம் கோரிய பங்களாதேஷ், ஐசிசி மறுத்ததும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. இதனால் பங்களாதேஷ் அகற்றப்பட்டு ஸ்காட்லாந்து அணி இடம் பெற்றது. இதை எதிர்த்து பாகிஸ்தான் புறக்கணிப்பு அச்சுறுத்தலை விடுத்துள்ளது.ஆனால் ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பங்கேற்பு ஒப்பந்தத்தை மீறினால் கடும் தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இதில் சர்வதேச மற்றும் பிராந்திய போட்டிகளில் இருந்து இடைநிறுத்தம், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் வெளிநாட்டு வீரர்களுக்கு NOC மறுப்பு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் அடங்கும். பிப்ரவரி 15, 2026 அன்று இலங்கையில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் போட்டியை புறக்கணிப்பதற்கு பிசிபிக்கு எந்த சட்டப்பூர்வ அடிப்படையும் இல்லை என்று கிரிக்பஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, பாகிஸ்தானின் புறக்கணிப்பு அச்சுறுத்தல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அஜிங்க்யா ரஹானேவின் கடுமையான கருத்து மற்றும் ஐசிசியின் எச்சரிக்கை ஆகியவை பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையில் பங்கேற்கும் என்பதை மேலும் உறுதிப்படுத்துகின்றன. வரும் நாட்களில் பிசிபி மற்றும் பாகிஸ்தான் அரசின் இறுதி முடிவு எதிர்பார்க்கப்படுகிறது.
